ஒரு பத்து தினங்களுக்கு முன் வீட்டுக்குள்ளேயே ஒரு சிறு விபத்து நிகழ்ந்தது! "கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது" என்று பெரியவர்கள் கூறியதன் அர்த்தத்தை அனுபவபூர்வமாக உணரும் வாய்ப்பு கிடைத்தது!!! அந்த புதன் இரவு, என் துணைவியார் எங்களது இரண்டாவது மகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். நான் அருகில் அமர்ந்து 'பராக்கு' பார்த்துக் கொண்டிருந்தேன்! திடீரென்று என் மனைவியின் கைவிரல் நகம், என் இடது கண் கருவிழியில் பட்டு விட்டது. சுரீரென்று தீப்பொறி பட்டது போல் ஒரு வலி, தொடர்ந்து பயங்கர உறுத்தல்! வெளிச்சம் கண்டு கண் கூசியது. இடது கண் பார்வையும் சற்று மங்கி விட்டது போல் தோன்றியது. சாதாரணமாக எதற்கும் அதிர்ச்சியடையாத நான், கண்ணுக்கு ஆபத்து என்றதும் சற்று கலங்கி விட்டேன்!
இரவில், நேரம் அதிகம் ஆகி விட்டதால், அடுத்த நாள் காலை கண் மருத்துவரைப் போய் பார்த்தேன். கண்ணை DILATE செய்து கண் பரிசோதனைக்கான உபகரணத்தில் வைத்துப் பார்த்த மருத்துவர் 'CORNEAL ABRASION, பயப்படாதீர்கள், சரியாகி விடும்' என்றார்கள். கண்ணுக்கு மருந்தும், மாத்திரைகளும் எழுதித் தந்ததோடு, ஒரு நாலைந்து நாட்கள் டிவி / கணினி பார்ப்பதற்கும் தடா போட்டு விட்டார். என் வாழ்க்கையே கணினி என்பதால், நாலைந்து தினங்கள் லீவு போட்டே ஆக வேண்டிய சூழ்நிலை!!! ஒரு வித கட்டாய ஓய்வு என்ற நிலையில் (மனைவியும் பணிக்குச் செல்பவர் என்பதால்) இரண்டு காரியங்கள் செய்ய முடிந்தது.
ஒன்று, என் சிறிய மகளுடன் (3 வயது) அதிக நேரம் செலவிட முடிந்தது. அவளை, அருகில் உள்ள பள்ளியிலிருந்து மதியம் அழைத்து வருவது, சாப்பாடு ஊட்டுவது, பேசுவது, இருவரும் மதியம் ஆனந்தமாக AC அறையில் தூங்குவது என்று பொழுது கழிந்தது! அவளுடன் தனியாகப் பேசிக் கொண்டிருந்தபோது தான், என் மகள் என்னமாய் பேசுகிறாள் என்று நிஜமாகவே ஆச்சரியப்பட்டேன்! இரண்டாவது, சூரியன் FM மற்றும் ரேடியோ மிர்ச்சி நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்க முடிந்தது. பல இரைச்சலான பாடல்களுக்கு (suppose என்னை காதலிச்சா, suppose என்னை கைபிடிச்சா - வகை) நடுவே பல நல்ல இளையராஜா / MSV பாடல்களையும் ரசிக்க முடிந்தது! மௌலி அவர்களின் பேட்டி ஒன்று சிறப்பாக இருந்தது.
பொதுவாக, FM ரேடியோவில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் இளைஞர்/இளைஞிகள் (சுசித்ரா, ஜீவா, பாலாஜி போன்றோர்) சின்னத்திரையில் வரும் தொகுப்பாளர்களைப் போல 'தமிழ்க்கொலை' புரிவதில்லை!!! பாடல் நிகழ்ச்சிகளை சற்று குறைத்துக் கொண்டு இன்னபிற நிகழ்ச்சிகளில் (நாடகம், க்விஸ், கவிதை) கவனம் செலுத்தினால், FM வானொலிக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகவேத் தோன்றுகிறது. இந்த கண் உபாதையினால், ஒரு நாலு நாட்கள் அலுவலகக் கவலை இல்லாமல் நிம்மதியாகவே இருந்தேன் என்று சொல்லலாம்! இதற்குள், என் அலுவலகத்தில், என் நெருங்கிய நண்பர்களிடையே ஒரு சின்னப்புரளி புழங்கிக் கொண்டிருந்தது என்பது தெரிய வந்தது!!! அதாவது, என் வீட்டில் ஒரு சின்ன கைகலப்பு காரணமாக என் கண்ணில் அடிபட்டு விட்டது என்று!
மறுபடியும் கண் மருத்துவரிடம் சென்றபோது, இடது கண் பார்வை சற்று தெளிவு அடைந்திருந்ததை நானே உணர்ந்தேன். கண்ணை சோதித்த அவரும், காயம் ஆறியிருப்பதாகவும், முழுமையாக குணமடைய 2-3 வாரங்கள் ஆகும் என்றும், கண் மருந்தை தொடருமாறும் அறிவுறுத்தினார். இம்முறை மற்றொரு technical jargon-ஐ பயன்படுத்தினார். அதாவது, 'corneal abrasion' சரியாகி விட்டதாகவும், அதன் தொடர்ச்சியாக 'TRAUMATIC IRITIS' ஏற்பட்டு இருப்பதாகவும் கூறினார். அலுவலகம் செல்ல ஆரம்பித்து விட்டேன்! தற்போது வலியும், உறுத்தலும் பெருமளவு குறைந்திருக்கிறது. இருந்தாலும், அதிக நேரம் டிவியோ கணினியோ தொடர்ந்து பார்க்காமல், கண்களுக்கு அவ்வப்போது ஓய்வு தந்த வண்ணம் இருக்கிறேன்.
கண்ணில் பட்ட இந்த அடியால், கண்ணின் அருமையை நன்கு உணர முடிந்தது! கண்களை சரியாகப் பயன்படுத்தாமல் ஒரு நான்கு நாட்களைத் தள்ளுவதே கடினமாகத் தோன்றிய எனக்கு, கண் பார்வை இல்லாத பலரின் மனவுறுதியையும், தன்னம்பிக்கையையும் வியந்து எண்ணிப் பார்க்கவும், புரிந்து கொள்ளவும் முடிந்தது. அந்த வரையில், இந்த கண்ணடிக்கு நன்றி!
கண்ணில் உறுத்தல் வெகுவாக குறைந்து விட்ட நிலையில், மனதில் ஒரு சிறு உறுத்தல்! இரு வாரங்களுக்கு முன் என் வலைப்பதிவில் 'மனைவிகளைப் பற்றி சில சங்கதிகள்! ' என்ற தலைப்பில் எழுதியிருந்தேன்!
என் மனைவியும் அதை (2 முறை!) படித்ததனால், சமயம் பார்த்து . . . . .
(சும்மா ஒரு ஜாலிக்குத் தான் சொல்றேன்! வலைப்பதியும் மனைவிமார்கள் Grrrrrrr என்று பாயாதீர்கள் ;-))
"கண்ணின் மணி போல, மணியின் நிழல் போல கலந்து" தான் எங்கள் இல்வாழ்வு தொடர்கிறது!!!
என்னவோ போங்கள்! மனைவிமார்களை கிண்டல் செய்து ஒரு பதிவு போட்டதற்கு, "கண் மேல் பலன்" கிடைத்து விட்டது :-((
என்றென்றும் அன்புடன்
பாலா